வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
சென்னை,
வடகிழக்கு பருவமழை கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு ஒரே நாளில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவானது. அதன் தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் நாளை மறுதினம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, வங்க கடலில் ஏற்கனவே அறிவித்தபடி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.