அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மேலும் 4 நாட்களுக்கு மழை…!
சென்னை,
அந்தமானில் நாளை (சனிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்து இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்பட சில இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக அந்தமானில் நாளை (சனிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், 15-ந்தேதி (திங்கட்கிழமை) உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘தாம்பரம் 23 செ.மீ., சோழவரம் 22 செ.மீ., எண்ணூர் 21 செ.மீ., கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் தலா 18 செ.மீ., மாமல்லபுரம் 17 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், பெரம்பூர் தலா 16 செ.மீ., தாமரைப்பாக்கம், அம்பத்தூர், எம்.ஜி.ஆர். நகர், எம்.ஆர்.சி. நகர் தலா 15 செ.மீ., சென்னை விமான நிலையம், தரமணி, அண்ணா பல்கலைக்கழகம், அயனாவரம், ஏ.சி.எஸ். கல்லூரி தலா 14 செ.மீ., செம்பரம்பாக்கம், பொன்னேரி, வில்லிவாக்கம், தாம்பரம் இந்திய விமானப்படைதளம் தலா 13 செ.மீ., சத்யபாமா பல்கலைக்கழகம், கேளம்பாக்கம், திருப்போரூர், தண்டையார்பேட்டை தலா 12 செ.மீ., பூந்தமல்லி, திருக்கழுக்குன்றம், காட்டுக்குப்பம், மேற்கு தாம்பரம் தலா 11 செ.மீ., செங்கல்பட்டு, இந்துஸ்தான் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், செய்யூர், மரக்காணம், ஊத்துக்கோட்டை தலா 10 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.