Breaking News
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரால் மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் உயிரிழப்பு

சென்னை,

சென்னை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சென்னை டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மழையில் நனைந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் இவர் நேற்று காலை வேலைக்கு வந்தபோது வலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து டி.பி.சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர். மயங்கி கிடந்த உதயகுமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி எவ்வித தயக்கமும் இன்றி அலேக்காக தூக்கி தனது தோளில் சுமந்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தார். பின்னர் அவரை, ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஒருவர் உயிருக்கு போராடும் நேரத்தில் மற்ற போலீஸ்காரர்களை உதவிக்கு அழைக்காமல் நேரடியாக களப்பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் செயலை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மயங்கி விழுந்த நபரை தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்த பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதயா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.