அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி…!
சென்னை,
வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்து வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட சில இடங்களில் கன மழை பெய்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (சனிக்கிழமை) உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அங்கிருந்து நகர்ந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுச்சேரி, கடலூர் மற்றும் ஏனைய உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.