Breaking News
அம்மா உணவகங்களில் 2 நாளில் 5 லட்சம் பேர் இலவசமாக சாப்பிட்டனர்

சென்னை:

சென்னையில் மழை பாதிப்பு அதிகம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கும், தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் உள்ளவர்களுக்கும் தரமான உணவு விநியோகிக்கப்படுகிறது. இது தவிர அம்மா உணவகங்கள் மூலமாகவும் மழை பாதிப்பு முடியும் வரை விலையில்லாமல் உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் 10-ந்தேதி முதல் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், இரவில் சப்பாத்தி ஆகியவை தயாரிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஏழை, எளிய, ஆதரவற்றோர், கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அம்மா உணவகம்

கடந்த சில மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட அம்மா உணவகங்கள் இலவசமாக உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து விறுவிறுப்படைந்தது.

காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள். மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்ட அம்மா உணவகங்கள் இப்போது களை கட்டியுள்ளது. காலை, மதியம், இரவு 3 வேளையும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடுவதால் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது.

கடந்த 2 நாட்களில் (10, 11-ந்தேதி) அம்மா உணவகங்களில் சுமார் 5 லட்சம் பேர் இலவசமாக வயிறாற சாப்பிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

10-ந் தேதி 2 லட்சத்து 32 ஆயிரத்து 400 பேரும், 11-ந்தேதி 2 லட்சத்து 65 ஆயிரம் பேரும் ஆக மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரம் பேர் உணவருந்தி உள்ளனர்.

2 நாட்களில் காலை சிற்றுண்டியாக சுமார் 5 லட்சம் இட்லி தயாரிக்கப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதியம் 1 லட்சத்து 39 பேருக்கு சாம்பார் சாதம் விநியோகிக்கப்பட்டுள்ளது. 10-ந்தேதி 65 ஆயிரம் பேரும், 11-ந்தேதி 74 ஆயிரம் பேரும் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர்.

இதேபோல இரவில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் சப்பாத்தி சாப்பிட்டனர். 10-ந்தேதி 56 ஆயிரம் பேருக்கும், 11-ந்தேதி 63 ஆயிரம் பேருக்கும் சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது. ஒருசில அம்மா உணவகங்களில் இரவில் புதினா சாதமும் விநியோகிக்கப்பட்டது.

ஒருசில அம்மா உணவகங்களில் மழைநீர் தேங்கியதால் உணவு தயாரித்து வழங்க முடியவில்லை. 6 அம்மா உணவகங்கள் பாதிக்கப்பட்டதால் வேறு இடங்களில் சமையல் செய்து உணவு விநியோகிக்கப்பட்டது. தற்போது 403 அம்மா உணவகங்களும் முழு அளவில் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.