4 வயது சிறுமி பலாத்கார வழக்கு; 30வது நாளில் குற்றவாளிக்கு ஆயுள்.! குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சூரத்: நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஒரு மாதத்திற்குள் ஆயுள் தண்டனை விதித்து சூரத் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த அஜய் நிஷாத் (39) என்பவர், கடந்த அக். 12ம் தேதி குஜராத் மாநிலம் சூரத் அடுத்த சச்சின் ஜிஐடிசி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அதையடுத்து சூரத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட அடுத்த பத்து நாட்களில் அஜய் நிஷாத்துக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கடந்த அக். 25ம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்தது.
குற்றம்சாட்டப்பட்ட அஜய் நிஷாத்திடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெறப்பட்டது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட அடுத்த ஐந்து நாட்களில் நீதிமன்றம் விசாரணையை முடித்தது. சில நாட்களில் நள்ளிரவு 12 மணி வரை இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடந்ததாக வழக்கறிஞர்கள் கூறினர். இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.கலா நேற்று குற்றம்சாட்டப்பட்ட அஜய் நிஷாத்துக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, குஜராத் மாநில விசாரணை நீதிமன்றங்களில், குறுகிய காலத்தில் பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்குவது இதுவே முதல் முறை என்றும், கிட்டத்தட்ட 30 நாட்களில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது இதுவே முதல்முறை என்றும் கூறினர்.