Breaking News
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் தடை
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கல்கி அணை நிரம்பியதால் அதில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. கல்கி அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா பிறப்பித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.