திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்…
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான கோவில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகாதீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. தீப கொப்பரை, தீபத்திற்கு தேவையான நெய், திரி ஆகியவை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மகா தீபம் ஏற்றுவதற்காக 3 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீப நெய் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாகும். இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும். கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு வர முடியாதவர்கள் இந்த 11 நாட்களில் வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம்.