‘பெட்ரோல், டீசல் வரியை குறைக்க சாத்தியமில்லை’; நிதி அமைச்சர் தியாகராஜன்
சென்னை : ‘பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி இன்னும் அதிகமாக தொடரும் நிலையில், மாநில அரசின் வரியை மேலும் குறைப்பது சாத்தியமில்லை’ என்று தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மத்திய அரசு நவம்பர், 3 முதல், பெட்ரோலுக்கு 5 ரூபாய்; டீசலுக்கு 10 ரூபாய் வரியை குறைத்துள்ளது. மத்திய அரசின் வரி குறைப்பாலும், பெட்ரோலின் விலை அடிப்படையில், தமிழகத்தில் வரி விதிப்பதாலும், சில்லரை விலையில் பெட்ரோலுக்கு 65 பைசா; டீசலுக்கு 10 பைசா கூடுதலாக குறையும்.
இதனால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு 1,050 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். மாநில அரசுகளும், பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. இது, ஏற்க இயலாத கோரிக்கை.
குறைந்து விடும்
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கும் முன், லிட்டருக்கு பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி 32.90 ரூபாய்; டீசல் மீதான வரி 31.80 ரூபாயாக இருந்தது. இதை முறையே 27.90 ரூபாய்; 21.80 ரூபாயாக மத்திய அரசு குறைத்து உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, பெட்ரோலுக்கு 18.42 ரூபாய்; டீசலுக்கு 18.23 ரூபாயை, மத்திய அரசு இன்னும் கூடுதலாக விதித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை லிட்டருக்கு, பெட்ரோல் மீதான மாநில வரி 21.46 ரூபாய்; டீசல் மீதான வரி, 17.51 ரூபாயாக உள்ளது.
2014ம் ஆண்டில் இருந்ததை விட கூடுதல் வரியை, அ.தி.மு.க., அரசு தான் செலுத்தியது.தி.மு.க., அரசு ஏற்கனவே, பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு, ஆக., 14ல் அமலுக்கு வந்தது. மத்திய அரசு ஏழு ஆண்டுகளாக, பெட்ரோல், டீசல் மீதான வரியை தொடர்ந்து அதிகரித்தது. இதை மீண்டும், 2014ல் இருந்த அளவுக்கு குறைத்துக் கொண்டால், மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்து விடும்.
ஏனெனில் இந்த வரி விதிப்பு, அடிப்படை விலை மற்றும் மத்திய அரசின் வரி விதிப்பின் மீது விதிக்கப்படும் வரி.எனவே, மத்திய அரசின் வரி இன்னும் அதிகமாக தொடரும் நிலையில், மாநில அரசின் வரியை மேலும் குறைப்பது நியாயமும் அல்ல; சாத்தியமும் அல்ல.
நியாயமான ஒரே தீர்வு
எனவே, 2014ம் ஆண்டில் இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை, மத்திய அரசு குறைக்க வேண்டும். இதுவே அனைவரும் பயனடையும் எளிமையான, நியாயமான ஒரே தீர்வு. இத்தகைய நடவடிக்கை தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்து விடும். இவ்வாறு தியாகராஜன் தெரிவித்துள்ளார்.