கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு- மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.35,208 கோடிக்கு ஒப்பந்தம்
கோவை:
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன.
தமிழகத்திலும் முதலீட்டாளர்கள் மாநாடு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துக்கான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
தி.மு.க ஆட்சி அமைந்ததும், முதல் மாதத்திலேயே ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் ஒரு நடவடிக்கையாக சென்னை கிண்டியில் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து 2-வதாக சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த இரு மாநாடுகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமே நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகத்தில் உள்ள கோவை போன்ற தொழில் நகரங்களிலும் நடத்தினால் மற்ற பகுதிகளும் தொழில் விரிவாக்கம் பெறும் என தொழில்துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய தி.மு.க. அரசின் 3-வது முதலீட்டாளர்கள் முகவரி மாநாடு கோவை கொடிசியாவில் இன்று நடந்தது.
முதலீட்டாளர்கள் முகவரி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கோவை, திருப்பூரில் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.
நேற்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து இரவு கோவை விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நவம்பர் 2021 கோயம்புத்தூர் என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
மேலும் 10 நிறுவனங்களின் ரூ.3,928 கோடி மதிப்பிலான திட்டங்களையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 13 நிறுவனங்களின் ரூ.13,413 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் மூலம் மட்டும் 15,525 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
இன்று போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் மொத்தம் 95,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை 2021 -யை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஒற்றை சாளர அலைபேசி செயலியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு இங்குள்ள தொழில்துறையின் அடுத்த கட்ட விரிவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு பெரிதும் உதவியாக அமையும் என கோவையை சேர்ந்த தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.