டிசம்பர் மாதத்தில் இருந்து தக்காளி விலை குறையும்…! – மத்திய அரசு தகவல்
புதுடெல்லி,
நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் விலை குறைந்தபோதிலும், டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் என பல பகுதிகளில் விலை அதிகமாகவே உள்ளது. அகில இந்திய சராசரி விலை கிலோவுக்கு ரூ.67 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 63 சதவீதம் அதிகம் ஆகும். இந்தநிலையில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், “தக்காளி விலை, கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா, இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த மழையால் தக்காளி செடிகள் அழுகியதே இதற்கு காரணம்.
வட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து தாமதமானது மட்டுமின்றி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவமழை தொடங்கியதால் தக்காளி விலை அதிகரித்து விட்டது.
இருப்பினும், டிசம்பர் மாதம் பிறந்ததில் இருந்து வடமாநிலங்களில் இருந்து தக்காளி வரத் தொடங்கும். இதனால் தக்காளி தாராளமாக கிடைக்கும் என்பதால் அதன் விலை குறையத் தொடங்கும். டிசம்பர் மாதம் தக்காளி விலை, கடந்த ஆண்டு இருந்த விலைக்கு வந்து விடும். அதே சமயத்தில், வெங்காயம் விலை, கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் இருந்த விலையை விட குறைந்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.