தமிழக முன்னாள்அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அமலாக்கத் துறை விசாரணை.
கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபரிடம் கோடிக்கணக்கில் வரவு, செலவு நடத்தியது தொடர்பாக, தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம், அமலாக்கத் துறையினர் நேற்று கேரளாவில் விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலம் ஆலப்புழா நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா. கேரளா மற்றும் தமிழகத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: என் கணவருக்கும், தமிழக சுகாதார துறையின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நட்பு இருந்தது.
தொழிலில் முதலீடு செய்வதற்காக, என்னிடம் இருந்த 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை 2017ல் விஜயபாஸ்கர் வாங்கிக் கொண்டார். கடந்த 2019ல் நான் தொழில் துவங்கியபோது பணத்தை கேட்டேன். 3 கோடி ரூபாயை மட்டும் கொடுத்தார்; மீதமுள்ள 11 கோடி ரூபாயை கேட்ட போது, என்னை ஒரு ஓட்டலின் அறையில் அடைத்து வைத்து மிரட்டினார்.
அப்போது அவர் ஆளும் கட்சி அமைச்சராக இருந்ததால், என் குடும்பத்தின் பாதுகாப்பு கருதி புகார் அளிக்கவில்லை. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார். இது குறித்து, நெல்லை மாநகர போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தொழில் ரீதியாக கோடிக்கணக்கில் புழங்கப்பட்ட பணம், கணக்கில் காட்டப்பட்டு உள்ளதா என அமலாக்கத் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இது குறித்து விசாரிக்க விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேற்று காலை 10:00 மணிக்கு ஆஜரானார்.
காலை 11:00 மணிக்கு அதிகாரிகள் விசாரணையை துவக்கினர். நேற்று மாலை வரை விசாரணை நீடித்தது. அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் விஜயபாஸ்கர் தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மானநஷ்ட வழக்கு
இது தொடர்பாக, விஜய பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமலாக்கத்துறையில் சாட்சியாக ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். என் மீது பொய் புகார் கூறியுள்ள ஷர்மிளா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்’ என்று கூறியுள்ளார்.