Breaking News
வங்கக் கடலில் உருவாகும் புதிய புயல்..!! – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை,
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் கன மழையால் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை.
அதற்குள், அடுத்தடுத்து மழை பெய்து, மக்களுடைய இயல்பு வாழ்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 5-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், புயலாக வலுப்பெற்று ஆந்திரா- ஒடிசா இடையே டிசம்பர் 4-ஆம் தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு ‘ஜாவித்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் இந்த பெயர்தான் இடம் பெற்றுள்ளது. ‘ஜாவித்’ என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம்.
முன்னதாக 2-ந் தேதி (இன்று) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 3-ந் தேதி தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.