ந்தியாவில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 500-பேரைக் கண்டறிந்து பரிசோதனை
பெங்களூரு,
ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பினால் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வைரஸ், உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இருப்பினும் இதை தொடர் ஆராய்ச்சி மூலம்தான் உறுதி செய்ய முடியும் என்பதால் உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் விஞ்ஞானிகள் இரவு, பகலாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். தங்கள் நாடுகளுக்கு இந்த வைரஸ் நுழைந்து விடக்கூடாது என பல நாடுகள் பயண கட்டுப்பாடுகளை அறிவித்து, அமல்படுத்தி உள்ளன.
இதற்கிடையே இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் நுழைந்து விட்டது தெரியவந்தது. கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது அந்தரங்கம் கருதி, பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் தெரிவிக்கப்பட மாட்டாது.அவர்கள் 2 பேரும் ஆண்கள். ஒருவருக்கு 66 வயது, மற்றவருக்கு வயது 46. இருவருக்கும் லேசான அறிகுறிகள் உள்ளன.
இந்த நிலையில், கர்நாடகாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுக் கண்டறியப்பட்ட இருவர் மூலமும் முதல் நிலை, 2-ம் நிலைத் தொடர்புடைய 500 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களிடம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.