Breaking News
உத்தரபிரதேசத்தில் 3 மெகா திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்கு வாரம் ஒருமுறை செல்லும் வகையில் பயண திட்டங்களை அமைத்துள்ளார்.

புதிய திட்டங்களை அறிவிப்பதோடு நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து மக்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ளார். கோரக்பூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் 3 மெகா திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அந்த 3 திட்டங்களும் 9 ஆயிரத்து 500 கோடி மதிப்புடையது.

கோரக்பூர் மேம்பாட்டு திட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 திட்டங்களில் உரத் தொழிற்சாலை திட்டம் ரூ.8 ஆயிரத்து 603 கோடி செலவில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உரத் தொழிற்சாலை மூலம் கோரக்பூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கோரக்பூர் உரத் தொழிற்சாலை ஆண்டு ஒன்றுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உரங்களை தயாரிக்கும் திறன் கொண்டது. இங்கு வேம்பு கலந்த யூரியா தயாரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு கோரக்பூரில் ரூ.1,011 கோடியில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மருத்துவமனை உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

பீகார், ஜார்க்கண்ட் மற்றும் நேபாள நாட்டு மக்களும் இந்த எய்ம்ஸ் மருத்துவ மனையில் உலகத்தர சிகிச்சையை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கோரக்பூர் மருத்துவகல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். இந்த ஆராய்ச்சிமையம் ரூ.36 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட இந்த ஆய்வு மையத்தில் அனைத்து வகை நோய்களுக்கும் ஆய்வுகள் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் நோய்களை ஆய்வு செய்து மற்ற மாநிலங்களை சார்ந்து இருக்கும் நிலையில் இருந்து உத்தரபிரதேசம் விடுபடும்.

கோரக்பூரில் இந்த 3 திட்டங்களையும் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி மின்சாரத்தில் இயங்கும் பேருந்து போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார். உத்தரபிரதேசத்தில் மாவட்டங்களுக்கு இடையே மின்சார பேருந்து போக்குவரத்தை அதிகரிக்க இந்த திட்டம் கைகொடுக்கும் என்று தெரிய வந்துள்ளது.

கோரக்பூர் மாவட்டம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சொந்த பகுதியாகும். எனவே பிரதமர் மோடி இன்று அங்கு 3 மெகா திட்டங்களை தொடங்கி வைப்பதால் அந்த பகுதி பா.ஜனதாவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த 3 மெகா திட்டங்கள் மூலம் கிழக்கு உத்தரபிரதேச மக்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாவதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.