“இனி விரல் நுனியில் அரசின் திட்டங்கள்” : DASHBOARD என்ற மின்னணு தகவல் பலகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை:மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை கண்காணிக்க மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கிவைத்தார்.தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய முயற்சியில் மின்னணு தகவல் பலகை திட்டம் என்ற புதிய திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் மின்னணு தகவல் பலகை (CM dashboard) திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு 360 என்ற இந்த திட்டம் மூலம், அரசின் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையிலும் ஆட்சி நிர்வாகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் முதலமைச்சர் தகவல்பலகை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மின்னணு தகவல் பலகையில் தேர்தல் வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீதான நடவடிக்கைகள், நிதி ஒதுக்கீடு, பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் இடம்பெறும். திட்டங்களின் நிலையை அறிந்து அதற்கான பணிகளை துரிதப்படுத்த மின்னணு தகவல் பலகை உதவும்.
தகவல் பலகை திட்டத்தை துவக்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தலுக்கு முன்பாக திருச்சி மாநாட்டில் நான் 7 உறுதிமொழிகளை கொடுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். நீங்கள் மறந்திருந்தாலும் அதை நான் மறக்கவில்லை. மக்களுக்கு நல்ல வெளிப்படையான, திறமையான, வேகமான ஆட்சி நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் என்றால் துல்லியமான களத்தகவல்கள் கிடைக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்காக பலரிடமும் ஆலோசனை செய்தேன்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு டேஸ்போர்டு என்ற தகவல் பலகைதான் சிறந்த வழி என்று பலரும் சொன்னார்கள். அதை தான் முதலமைச்சரான உடன் அரசு செயலாளர்கள் கூட்டத்தில் டேஸ்போர்டு உடனடியாக வேண்டும் என்று கேட்டேன். இதன் மூலம் எங்கே தாமதம் ஏற்படுகிறது. எங்கே கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
திட்ட அறிவிப்புக்கும் அது செயல்பாட்டுக்கு வருவதற்கும் எங்கே தேவையில்லாத காலதாமதம் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதேபோல், அடுத்து வர இருப்பதை சரியாக கணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்த தகவல் பலகை கை கொடுக்கும். இதன்மூலம், நான் ஏற்கனவே உறுதியளித்தபடி வேகமான, திறமையான, வெளிப்படையான நிர்வாகத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க முடியும். இது வேகமான ஆட்சி மட்டுமல்ல. விவேகமான ஆட்சி. துரிதமான ஆட்சி மட்டும் இல்லை. துல்லியமான ஆட்சி. உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் உங்களை விட நான் அக்கறையுடன் இருக்கிறேன் என்பதற்கு டேஸ் போர்டு சாட்சி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.