கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் பொன்முடி
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அளித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் மருத்துவக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதில் 1-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கலகங்களில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், கல்லூரிகளில் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறுகையில்,
“கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவலால் பிப்ரவரி 1 ஆம் தேதி ஆன்லைன் வழியாக நடைபெறும் என ஏற்கெனவே தெரிவித்து இருந்தோம். தற்போது கல்லூரிகள் திறக்கப்படுவதால், ஆன்லைன் தேர்வில் மாற்றம் ஏற்படுமா என பலர் சந்தேகிக்கின்றனர்.
இதுபற்றி நான் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியபோது, அவர் கல்லூரிகளில் முதல், மூன்றாம் மற்றும் ஐந்தாம் பருவ செமஸ்டர் தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் வழியாகவே நடைபெறும் என தெரிவித்தார். எனவே ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதில் எந்த மாற்றமும் இல்லை”. இவ்வாறு அமைச்சர் கூறினார்.