தஞ்சையில் 2 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு
தஞ்சை,
தஞ்சையில் கீழவாசல் அருகே மகர்நோன்பு சாவடி பகுதியில் 2 வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகின்றனர்.
முகமது யாசின், அப்துல் காதர் அகமது ஆகிய 2 பேர் வீடுகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவிர, தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு, அப்துல் காதர், மண்ணை பாபா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், மண்ணை பாபா கிலாபத் அமைப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். புழல் சிறையில் உள்ள மண்ணை பாபா அளித்த தகவலின்படி மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென அதிகாலை முதல் சோதனை நடத்தியது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.