பழனிசாமி, பன்னீர்செல்வம் சொந்த வார்டுகளில் தோல்வி; அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி
சேலம் : அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வீடு உள்ள சேலம் மாநகராட்சி வார்டிலும், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வீடு உள்ள பெரியகுளம் நகராட்சி வார்டிலும் அ.தி.மு.க., தோல்வியடைந்தது, அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலம், 23வது வார்டில் உள்ள நெடுஞ்சாலை நகரில் வசிக்கிறார். கடந்த 2011, 2016 சட்டசபை தேர்தலில், இந்த வார்டு அடங்கியுள்ள சேலம் மேற்கு தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. கடந்த சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பிடித்த, பா.ம.க., இங்கு வெற்றி பெற்றது.
அதேபோல், 2011ல் நடந்த மாநகராட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த இந்திரா வெற்றி பெற்று கவுன்சிலரானார். தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில், மீண்டும் இந்திராவுக்கே ‘சீட்’ வழங்கப்பட்டது. இவரை எதிர்த்து தி.மு.க., சார்பில் சிவகாமி போட்டியிட்டார்.தி.மு.க.,வின் சிவகாமி 3,694 ஓட்டுகளும், அ.தி.மு.க.,வின் இந்திரா 2,328 ஓட்டுகளும், பா.ம.க., வேட்பாளர் ஜோதிபிரியா 682 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர் பாலா 183 ஓட்டுகளும் பெற்றனர்.
கட்சியினரின் உள்ளடி வேலை, குளறுபடிகளும், பா.ம.க., – பா.ஜ., ஓட்டு பிரிப்பும், இந்த வார்டில் தி.மு.க.,வின் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்த வார்டு அருகில் உள்ள, 21, 22, 24, 25வது வார்டுகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றபோதும், பழனிசாமி வீடு உள்ள 23வது வார்டில் ஏற்பட்ட தோல்வி, அ.தி.மு.க.,வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல், பழனிசாமியின் சொந்த தொகுதியில் உள்ள எடப்பாடி நகராட்சியையும், தி.மு.க., கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
|
பெரியகுளம்
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வீடு, தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி, 21வது வார்டில் உள்ளது. இந்நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க., – 12, அ.தி.மு.க., – 8, சுயேச்சை – 3, அ.ம.மு.க., – 3, பா.ம.க., – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – பார்வர்டு பிளாக், மா.கம்யூ., ஆகியவை தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்றதும் ஒரு சுயேச்சை, தி.மு.க.,வில் இணைந்தார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், பெரியகுளத்தை தி.மு.க., கைப்பற்றியது. இந்நிலையில், பன்னீர்செல்வம் வீடு அமைந்துள்ள 21வது வார்டிலேயே, அ.தி.மு.க., தோற்றுள்ளது.
அக்கட்சி வேட்பாளர் மஞ்சுளா 352 ஓட்டு மட்டுமே பெற்றார். அவரை எதிர்த்து நின்ற தி.மு.க.,வின் சந்தான லட்சுமி 451 ஓட்டுக்கள் பெற்றார். அதே நேரம், நகராட்சியின் 24வது வார்டில், பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.சண்முகசுந்தரம் வெற்றி பெற்றுள்ளார்.