Breaking News
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் சில மையங்களில் கள்ளஓட்டு பிரச்சினை எழுந்தது. இதனால் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பிரச்சினை எழுந்தது. ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கள்ளஓட்டு போடுவதாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அவர், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் குறிப்பிட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார். அப்போது தி.மு.க. தொண்டர் நரேஷ்குமார் (வயது 33) என்பவரை ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் பிடித்தனர். பின்னர் அவரது சட்டையை கழற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஜெயக்குமாரும் தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்த நிலையில் நரேஷ்குமார், ஸ்டாலின் அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக சேர்ந்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் மற்றும் 40 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், தமிழ்நாடு பொதுச்சொத்து சேதம் விளைவித்தல், பயங்கர ஆயுதங்கள் கொண்டு காயம் ஏற்படுத்தும் நடவடிக்கை உள்பட 15 சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டையார்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஜெயக்குமாரை, சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைத்து, வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் (பொறுப்பு) சுந்தரவதனம் தலைமையிலான 40 பேர் அடங்கிய போலீசார் நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்தனர். இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அவரை, லுங்கியுடன் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து,கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நள்ளிரவில் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர்,மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டார்.
இதனையடுத்து,அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஜாமீனில் விடுவிக்க கோரும் மனு மீது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,பூந்தமல்லி சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோரி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயக்குமார் உட்பட 110 பேர் மீது அரசு அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது, உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரவும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில்,ராயபுரம் போலீசார் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.