Breaking News
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன் அறிவிப்பு இன்றி எல்லைக்கு செல்ல வேண்டாம்: இந்திய தூதரகம்
புதுடெல்லி,
உக்ரைன் மீது நேற்று முன் தினம் ரஷியா போர் தொடுத்தது. உக்ரைன் எல்லைக்குள் குண்டு மழை பொழிந்த ரஷிய படைகள், வேகமாக முன்னேறிச்சென்றன.  ஒரு பக்கம் ஏவுணை வீச்சும், மறுபக்கம் குண்டுமழையும் பொழிந்ததால் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் முதல்நாள் போரிலேயே உருக்குலைந்து போயின. தொடர்ந்து 3-வது நாளாக உக்ரைன் மீது ரஷியா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் – ரஷியா போரால், உக்ரைனில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். உக்ரைன் தனது வான்பகுதியை மூடிவிட்டதால், அங்கு மீட்பு விமானங்கள் செல்ல முடியாதநிலை நிலவுகிறது. இதை கருத்தில்கொண்டு மத்திய வெளியுறவு அமைச்சகமும், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகமும் மாற்று ஏற்பாடுகளை வகுத்து வருகின்றன.அதன்படி, உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, சுலோவாகியா ஆகிய நாடுகளுடனான எல்லை பகுதியில் இந்திய தூதரகம் சோதனை முகாம்களை அமைத்துள்ளது.
இதனிடையே,  முன் அறிவிப்பு இன்றி எல்லைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தூதரக அதிகாரிகள், தூதரக அவசர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உக்ரைனின் மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இருப்பது எல்லையை நோக்கி செல்வதை விட பாதுகாப்பானது. எனவே, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இருப்பவர்கள்  மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் குடியிருப்புகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.