Breaking News
“ஆபரேஷன் கங்கா”: ருமேனியாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 5-வது விமானம்..!
புதுடெல்லி,
ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர்.
குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று முன்தினம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் சிறப்பு மீட்பு விமானம் மாலையில் மும்பை வந்து சேர்ந்தது. இவ்வாறு 4 விமானங்கள் மூலமாக இதுவரை 21 தமிழக மாணவர்கள் உள்பட 907 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பலர் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில் அவர்களையும் மீட்கும் விதமாக 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 5 விமானங்கள் புகாரெஸ்டுக்கும், 2 விமானங்கள் புடாபெஸ்டுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. இதன்படி உக்ரைனில் இருந்து இதுவரை 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.
சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த மாணவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு எங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளது. இந்திய தூதரகம் மூலம் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. முக்கிய பிரச்சனை எல்லையை கடப்பது. அனைத்து இந்தியர்களும் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். உக்ரைனில் இன்னும் பல இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

 

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.