ரஷியாவுடனான நட்பு இன்னும் வலுவாக உள்ளது – சீனா
பீஜிங்,
உக்ரைன் மீது ரஷியா இன்று 12-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன
இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா இன்று அறிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது மென்மையான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவுடனான உறவு இன்னும் வலுவாக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யி கூறுகையில், சீனா – ரஷியா இடையேயான நட்பு இன்னும் வலுவாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகள் மிகவும் பரந்துபட்டுள்ளது. ரஷியா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது தொடபாக சர்வதேச சமூகத்தின் முயற்சியில் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது’ என்றார்.