இந்திய ஏவுகணை எல்லைக்குள் விழுந்ததற்கு பதிலடி கொடுக்க தயாரானதா பாகிஸ்தான்?
லாகூர்,
அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் உள்ள படைத்தளத்தில் கடந்த 9-ம் தேதி வழக்கமான பயிற்சியின் போது இந்திய விமானப்படை போர் விமானத்தில் இருந்து அதிநவீன சூப்பர்சோனிக் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது.
அந்த ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் 125 கிலோமீட்டர் தூரம் பயணித்து அந்நாட்டின் மியன் ஷனு என்ற பகுதியில் விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் இந்தியா – பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
சூப்பர்சோனிக் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் விழுந்ததற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து ஏவுகணை வந்ததுற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை ஏவப்பட்ட உடன் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைக்கு பதிலடியாக அதேபோன்ற ஏவுகணையை இந்தியா மீது ஏவ பாகிஸ்தான் தயார் நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், முதற்கட்ட ஆய்வில் அந்த ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது என தெரியவந்ததையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது ஏவுகணை வீசும் திட்டத்தை கைவிட்டதாக தகவல் சர்வதேச செய்தி நிறுவனமான புலூம்மெக்ர் தெரிவித்துள்ளது.