Breaking News
வடபழனி முருகன் கோவிலில் ரூ.15 லட்சம் தரமற்ற லட்டு, முறுக்கு பிரசாதம் பறிமுதல்
பூந்தமல்லி :

சென்னை வடபழனி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், தரமற்ற முறையில் விற்கப்படுவதாக சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த புகார் குறித்து ஆய்வு நடத்துவதற்காக சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றனர்.

RAMESH 9840502445
அப்போது அங்கு பக்தர்களுக்கு லட்டு, அதிரசம், முறுக்கு போன்ற பிரசாதங்கள் தனி நபர் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாலித்தீன் கவரில் அடைத்து விற்கப்பட்டு வந்த லட்டு, அதிரசம், முறுக்கு, தட்டை போன்ற உணவு பொருட்கள் பாக்கெட்டில் தயாரித்த தேதி, காலாவதி தேதி, தயாரிக்கப்படும் இடம் ஆகியவற்றின் குறிப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதை கண்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சியானது.

மேலும் பிரசாத கடையில் பணிபுரியும் ஊழியர்களிடம் அதிகாரிகள் குழுவினர் விசாரித்த போது, வடபழனி சாஸ்திரி நகரில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்த பிரசாத உணவுகள் தயாரிக்கப்படுவதாகவும், அங்கு பாக்கெட் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரும் தகவலையும் கூறியுள்ளனர்.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வடபழனி சாஸ்திரி நகரில் நடத்தப்பட்டு வந்த உணவு தயாரிக்கும் இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதில், பிரசாதம் தயாரிக்கப்படும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், உணவு தயாரிப்பதற்கான உரிமம் பெறாமல் உணவு கூடம் இயங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள லட்டு, முறுக்கு, தட்டை, அதிரசம் போன்ற பிரசாத பாக்கெட்டுகள் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி உணவை தயாரித்த சீனிவாசன் என்பவருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

மேலும், வடபழனி முருகன் கோவில் ஒப்பந்த அடிப்படையில் பிரசாத கடை நடத்தி வரும் சீனிவாசன் டெண்டர் விவரம் குறித்து கோவில் அறநிலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ரூ.15 லட்சம் பிரசாதம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.