Breaking News
தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத்தொகை உள்பட ரூ.20,860 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழகத்திற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு நிலுவைத் தொகை 13,504.74 கோடி உள்பட நிலுவையில் உள்ள பல்வேறு மானியத் தொகையான ரூ.20,860 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார். மேலும், காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, திமுக அலுவலகம் வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை டெல்லியில் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி ஆலோசனை நடத்தினார்.

மனுவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: 14வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தினை விடுவிக்க வேண்டும். 2015-20 காலகட்டத்திற்கு, 14வது நிதிக்குழு, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7,899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில், 2,900 கிராம பஞ்சாயத்துகளில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2,900 கிராம பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், 2,900 கிராம பஞ்சாயத்துகளில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதேபோன்று 14வது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழ்நாட்டுக்கு 2,524.20 கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது.

அந்த மானியத்தொகையில் பரிந்துரை காலத்தில் ஒன்றிய அரசு 2016-17ம் ஆண்டுக்கான செயல்பட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இந்நிலையில், அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது. மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றியபோதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய நிலையிலும், 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியம் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து 2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டுக்கான மானியமும் விடுவிக்கப்படவில்லை. இருப்பினும், 2017-18ம் ஆண்டிற்கான செயல்பாட்டு மானியத்தினை பெரும்பாலான மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

எனவே, அடிப்படை மானிய நிலுவைத்தொகையான 548.76 கோடி ரூபாயையும், செயல்பாட்டு மானியம் 2,029.22 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க வலியுறுத்தப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றினால், மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலம் இன்னும் கடும் நிதிச்சுமையில் உள்ளது. பெருந்தொற்றினால், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், மாநில அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது.

மாநிலம் தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய பொழுது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மாநிலம் தனது நிதி சார்ந்த அதிகாரத்தைக் கைவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில், உறுதியளிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், வசூலிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி இருந்துள்ளது. பெருந்தொற்றிற்கு முன்னரே, இத்தகைய போக்கு காணப்பட்டது. அதன்பின், இந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை.

இந்நிலையில், 30.6.2022 அன்று, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வருகிறது. இதன் விளைவாக, 2022-23ம் நிதியாண்டில், தமிழ்நாடு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும். இழப்பீடு வழங்கும் காலத்தை, ஜூன் 2022க்குப் பின் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.