கோவை அருகே பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு..!
கோவை:
கோவை மாவட்டம், அன்னூரில் உள்ள மன்னீஸ்வரர் கோவில் அருகே பழமையான நடுகல்கள் இருப்பதாக திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆய்வு மைய இயக்குனர் தொல்லியல் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மன்னீஸ்வரர் கோவிலின் அருகே உள்ள குளம், மின்மாற்றி அருகில், 3 சாலை சந்திப்பு பகுதியில் சாலையோரம் பாதி புதைந்தநிலையில் என 3 நடுகல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றை ஆய்வு செய்ததில் அவை பழமையானவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:-
கோவை மாவட்டம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் அருகே குளக்கரையில் 2 நடுகல்களும், அப்பகுதியில் 3 சாலை சந்திப்பில் ஒரு நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த 3 நடுகல்களும் மீட்கப்பட்டு அங்கு உள்ள தருமராச கோவிலில் வைக்கப்பட்டு உள்ளன. இதில் போர்க்கடவுளான கொற்றவை முன்பு போரில் வெற்றி பெற தன் தலையை பலியிடுவதாக வேண்டிகொள்வர். இது தலைப்பலி அல்லது நவகண்ட சிற்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை கல்வெட்டு 90 செ.மீ உயரமும், 40 செ.மீ அகலமும் கொண்ட வகையில் உள்ளது.
2-வது நடுகல்லானது 80 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலமும் கொண்ட இந்த நடுகல்லில் உள்ள வீரமறவன் தன் இடது கையில் வில்லும், வலது கையில் அம்புமும் பிடித்து போருக்கு தயாராக உள்ளான். இந்த நடுகல் தமிழக நடுகல் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
3-வதாக கண்டுபிடித்தது கொங்கு மண்டலத்தில் அரிதாக காணப்படும் இருவீரர் நடுகல் வகையை சேர்ந்தது ஆகும். இந்த நடுகல் 95 செ.மீ. உயரமும், 45 செ.மீ. அகலமும் கொண்டதாகும். இவை கொங்கு மண்டல மக்களின் வாழ்வியலை எடுத்தியம்புகின்றன.
இந்த 3 நடுகல்களிலும் எப்போது வடிவமைக்கப்பட்டது என்பது போன்ற எழுத்து பொறிப்புகள் இல்லை. இருந்தபோதிலும் நடுகல்களை ஆய்வு செய்துபார்த்தபோதும், சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும்போதும் இவை கி.பி.12-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.