Breaking News
“வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்” – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…!
தேனி,
தேனி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் புறவழிச்சாலையில் இன்று நடந்தது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தேனி மாவட்டத்துக்கு வந்தார். வைகை அணை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் அவர் தங்கினார்.
இன்று காலை விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தேனியில் விழா நடக்கும் இடத்துக்கு வந்தார். விழா பந்தல் வரை வேனில் வந்து இறங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டதும் மக்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அங்கு திரண்டு நின்ற மக்களை பார்த்து அவர் கையசைத்தார். பின்னர் மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் அவர் நடந்து சென்றார். அங்கு மக்கள் ஆர்வத்தோடு அவரிடம் கைகுலுக்க வந்தனர். அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கினார். பின்னர் விழா மேடையில் ஏறி, மக்களை பார்த்து கும்பிட்டார்.
பின்னர் தேனி மாவட்டத்தில் ரூ.114.21 கோடி மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.74.21 கோடி மதிப்பில் 102 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து விழாவில் முதல்-அமைச்சர் பேசும்போது,
 “நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று மே 7-ந்தேதி ஓராண்டு நிறைவு பெறுகிறது. தேனிக்கு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்துள்ளேன். தேனி மாவட்டத்தை கருணாநிதி உருவாக்கினார். தேனி கலெக்டர் அலுவலகத்தை கருணாநிதி தான் திறந்து வைத்தார்.
தேனி உழவர் சந்தையை கருணாநிதி தொடங்கி வைத்தார். 18-ம் கால்வாய் திட்டத்தை கருணாநிதி தான் தொடங்கி வைத்தார். தேனி புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்து அன்றைக்கு துணை முதல்-அமைச்சராக இருந்த நான் தான் அடிக்கல் நாட்டினேன் என்பதை பெருமிதத்தோடு நினைவு கூறுகிறேன்.
இந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ் 10 ஆயிரத்து 427 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இது தான் ஒரு நல்ல ஆட்சியின் இலக்கணம். இது மக்களுக்கான அரசு. இதை தான் திராவிட மாடல் அரசு என்று பெருமையோடு சொல்கிறோம். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்.
அது தான் என்னுடைய மாடல். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல். அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சேரும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.