மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது: பிரஷாந்த் கிஷோர் பரபரப்பு டுவிட்
புதுடெல்லி,
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர், நேரடி அரசியலில் இணையப் போவதாக சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட பிரஷாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது:-
ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பு கொள்கையை வடிவமைக்க உதவுவதற்குமான எனது தேடல் 10 வருட ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது. தற்போது மக்களிடம் நான் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்”என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான தனது பரிந்துரைகளை பிரஷாந்த் கிஷோர் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் , அதனை பிரஷாந்த் கிஷோர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் காங்கிரஸ் தெரிவித்தது.
இந்த நிலையில், நேரடி அரசியலில் ஈடுபட போவதாக பிரஷாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தை மையமாக வைத்து அரசியல் கட்சியை பிரஷாந்த் கிஷோர் தொடங்க வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.