பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிப்போம் – சுப்ரீம்கோர்டு அதிரடி
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி நடந்த விசாரணையின்போது, ‘இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மே 4-ந்தேதிக்கு (இன்று) தள்ளிவைத்ததுடன், எழுத்துப்பூர்வமான வாதங்கள் இருப்பின் அவற்றை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதித்தனர்.
இந்தநிலையில் கவர்னரின் பங்கு தொடர்பாக மூத்த வக்கீல் ராகேஷ் துவிவேதி அளித்த 14 பக்க அறிக்கையை தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தது. அந்த ஆவணத்தில், சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளும், அரசியலமைப்பு சட்ட அவையில் அம்பேத்கர் பேசிய விவாதமும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் சட்டசபையின் தீர்மானத்தை ஒருமனதாக முன்மொழிந்த அமைச்சரவையின் முடிவை அமல்படுத்தாமல் கவர்னர் தடுத்து வைத்திருப்பதுடன், இந்த விவகாரத்தை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்பு சாசனத்தை மீறிய செயலாகும். இதுபோன்ற அதிகாரத்தை கவர்னருக்கு அரசியலமைப்பு சாசனம் 161-வது பிரிவு அளிக்கவில்லை’ என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்றும், ஜனாதிபதி முடிவுக்காக காத்திருக்க மாட்டோம் என்றும் சுப்ரீம்கோர்டு அதிரடியாக தெரிவித்துள்ளது.
மேலும் அமைச்சரவை ஒரு முடிவெடுத்து அதுபற்றி கவர்னர் முடிவெடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதா..? இல்லையா..? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம்.
பேரறிவாளன் விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானம் மீது கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை?. ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கவே தேவையில்லையே என்பதே எங்களது கருத்து. சட்டம் தெளிவாக உள்ளது. அமைச்சரவை முடிவு மீது கவர்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் சிறையில் உள்ளார். அவரது நடத்தை நன்றாக உள்ளதால் ஜாமீன் வழங்கினோம், இதில் முடிவெடுக்க என்ன சிக்கல் உள்ளது அரசியல் சாசனத்தின்படி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கவில்லை என்றால் அரசியல் சாசனம், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புகள் அடிப்படையில் சுப்ரீம்கோர்ட்டே முடிவெடுக்கும் என்று கூறி வழக்கினை வரும் 10ஆம் தேதிக்கு (செவ்வாய்கிழமை) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக வாதிட ஒன்றும் இல்லை என மத்திய அரசு சொன்னால் உடனே பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தநிலையில், இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, “அமைச்சரவை முடிவு, தீர்மானங்கள் சட்ட சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தால் அதன் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப முடியும், அதற்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்தது.