Breaking News
4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு: அகழாய்வில் கண்டுபிடிப்பு – முதல்வர்

சென்னை,-”தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு, 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள், அகழாய்வில் கிடைத்துள்ளன. இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.பு

latest tamil news

புரிந்துணர்வுசட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:அகழாய்வுகளில் கிடைக்கக் கூடிய தொல்பொருட்களை ஆய்வு செய்ய, புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு அறிவியல் வழி ஆய்வு செய்யப்பட்டதில், சிவகங்கை மாவட்டம், கீழடிக்கு அருகே அகரத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெல் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.துாத்துக்குடி மாவட்டம், சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் செல்லும் செங்கல் வடிகாலில், நன்னீர் சென்றுள்ளதாகவும், தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலையிலிருந்து இந்நீர் கொண்டு வரப்பட்டதாகவும், ஆய்வில் தெரிய வருகிறது

.கடந்த ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு சேகரிக்கப்பட்ட இரண்டு கரிம மாதிரிகள், அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தின் ‘பீட்டா’ பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டன.காலக்கணக்கீடு முடிவுஅந்த பகுப்பாய்வின் காலக்கணக்கீடு முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன. அவற்றின் மைய அளவீட்டுக் காலம் முறையே, கி.மு., 1615 மற்றும் கி.மு., 2172 என்று காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் வழியாக, தமிழகத்தில் இரும்பு பயன்பாடு, 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மனித இனம் இரும்பின் பயனை உணரத் துவங்கிய பின்பு தான், அடர்ந்த வனங்களை அழித்து, வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகி உள்ளது.அந்த வகையில், தமிழகத்தில் வேளாண்மை சமூகம் துவங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்கு, ஒரு தெளிவான விடை கிடைத்திருக்கிறது.

latest tamil news

28 இடங்கள்இந்தியாவில் இரும்புக் கால பண்பாடு நிலவிய கங்கை சமவெளி, கர்நாடகம் உள்ளிட்ட, 28 இடங்களில், இதுவரை காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகளான, 4,200 ஆண்டுகள் என்பதே, காலத்தால் முந்தியது என்பது, நமக்கெல்லாம் பெருமை அளிக்கத்தக்க செய்தி.அதேபோல், கருப்பு – சிவப்பு பானை வகைகள், 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே, அதுவும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது

.தமிழக தொல்லியல் துறையின் முயற்சிகள், இத்தோடு நின்றுவிடப் போவதில்லை. தொடர்ந்து தமிழர்கள் தடம் பதித்த, இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்து வெற்றி பெற்ற நாடுகளிலும், அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு கேரளாவின் பட்டணம்; கர்நாடகாவின் தலைக்காடு; ஆந்திராவின் வேங்கி; ஒடிசாவின் பாலுார் பகுதிகளில், அகழாய்வு மேற்கொள்ளப்படும். கடமைசங்க காலத் துறைமுகமான கொற்கையில், ஆழ்கடலாய்வின் முதற்கட்டமாக, முன்கள ஆய்வு இந்த மாதம் துவக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்து, ஆய்வு செய்திடும் திட்டத்தை, தமிழக தொல்லியல் துறை, இந்த ஆண்டு முதல் மேற்கொள்ளும்.இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் துவங்கி எழுதப்பட வேண்டும் என்பதை, சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் வழி நிறுவுவதே, நம் அரசின் தலையாயக் கடமை. இதற்கு முத்தாய்ப்பாக, தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு, 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை, மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் நிலை நிறுத்தியுள்ளன. இது நமக்கெல்லாம் பெருமை.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.