கை கொடுத்தது திடீர் மழை: மின் தேவை கடும் சரிவு
சென்னை: சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்று பெய்த மழையால் தமிழக மின் தேவை 2000 மெகா வாட் அளவுக்கு சரிவடைந்துள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் இருந்தது. எப்போதும் இல்லாத வகையில் ஏப். 29ம் தேதி மதியம் 2:30 மணிக்கு மின் தேவை 17 ஆயிரத்து 563 மெகா வாட்டாக அதிகரித்து சாதனை படைத்தது. பின் தினமும் பகலில் 15 ஆயிரம் மெகா வாட் என்றளவிலும்; காலை மாலையில் 16 ஆயிரம் மெகா வாட் அளவிலும் மின் தேவை இருந்து வருகிறது. நிலக்கரி வரத்து குறைவால் மின் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியம் தடுமாறியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பல மாவட்டங்களில் திடீரென கன மழை பெய்தது. குறிப்பாக மின் தேவை அதிகம் உள்ள சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய மழை பெய்தது. இதையடுத்து நேற்று மின் தேவை 2000 மெகா வாட் அளவுக்கு சரிந்து 13 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு குறைந்தது.காற்றாலைகளில் இருந்து 3000 மொ வாட் மேல் மின்சாரம் கிடைக்கிறது.
மின் தேவை குறைந்துள்ள சூழலில் காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை முழுதுமாக பயன்படுத்துவதற்காக சேலத்தில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் திறன் உடைய மூன்று அலகுகளில் நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.