மே 26ஆம் தேதி முதல் ஏற்காடு கோடை விழா – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
சென்னை,
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் வருடந்தோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதாலும் தற்போது ஏற்காட்டில் மழை பெய்து சீதோஷன நிலை குளுமையாக உள்ளதாலும் கோடை விழா நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்காடு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ஐந்திணை பூங்கா, ரோஜா தோட்டம் போன்ற பூங்காக்களில் சுமார் 2 லட்சம் மலர்களை உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சேலத்தில் ஏற்காடில் 45-வது கோடைவிழா வரும் 26-ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
ஏற்காடு கோடை விழாவிற்காக சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் 5 லட்சம் மலர்களைக் கொண்டு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, மாம்பழ கண்காட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.