Breaking News
இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு… 78 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என மத்திய வங்கி தகவல்!!

கொழும்பு:

இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதுடன், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இதையும் ஏற்காத போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர்
நந்தலால் வீர சிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசால் எந்த கடனுக்கான பணத்தையும் திருப்பி செலுத்த முடியவில்லை என்றும் கடந்த மாதம் 18ம் தேதி கடனாளர்களுக்கு செலுத்த வேண்டிய 78 மில்லியன் டாலர் பணத்திற்கான கூடுதல் ஒரு மாத அவகாசமும் முடிந்துவிட்ட நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கையில் பணவீக்கம் 30%ல் இருந்து 40%ஆக அதிகரிக்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார். எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிபொருட்களை ஏற்றி வந்த கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.