ஒடிசாவில் வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்கள்
புவனேஸ்வர் :
ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் (வயது 28) என்ற வாலிபர், பகுதி நேரமாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22-ந்தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களை சந்தித்து வேலை கேட்டுக்கொண்டிருந்தார். பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்பதற்காக சென்றார்.
அப்போது ஒரு லாரியை நோக்கி இவர் சென்றபோது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை காணவில்லை என சத்தம்போட்டார். உடனே சில டிரைவர்கள் சேர்ந்து கஜேந்திரா ஸ்வைனை பிடித்து, அவர்தான் செல்போனை திருடியதாக கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர். அத்துடன் நிற்காமல் அவருடைய கழுத்தில் காலணி மாலையை அணிவித்தனர். பின்னர் அவரை ஒரு லாரியின் முன்புறம் கயிற்றால் கட்டி ஓட்டிச்சென்றனர். 3 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்ற அவர்கள், பின்னர் அவிழ்த்து விட்டனர்.
ஆனால் இந்த அதிர்ச்சி மற்றும் காயம் போன்றவற்றால் அவரால் பின்னர் எழுந்திருக்கவும் முடியவில்லை. இதற்கிடையே லாரி டிரைவர்களின் இந்த கொடூர செயலை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். வைரலாக பரவிய இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தை நிகழ்த்திய லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை பார்த்த போலீசாரும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட லாரி டிரைவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்த மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். செல்போன் திருடியதாக கூறி வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற இந்த கொடூர சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.