Breaking News
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு

பென்னாகரம்:

கர்நாடக, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 72 ஆயிரத்து 252 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் 71 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதே போல் கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 333 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த 2 அணைகளில் இருந்தும் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 06 ஆயிரத்து 423 கனஅடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கூடுதலாகவும், குறைவாகவும் மாறி மாறி திறக்கப்படுகிறது. காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு தண்ணீர் கரைபுரண்டு வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் இன்று-2 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை 20 ஆயிரம் கனஅடி வந்த நிலையில் இரவு 60 ஆயிரமாக தண்ணீர் அதிகரித்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 05 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதிகரித்து வந்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர்.

நீர்வரத்து அதிகரித்துள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினரும் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர். தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.