தனுஷ்கோடியில் கடல் சீற்றம்- கடலில் நீராட பக்தர்களுக்கு தடை
ராமேசுவரம்: பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவில் ஆழ்கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் அங்கு கடல் கடும் சீற்றத்துடன் உள்ளது. அதன்காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சிரமத்துடன் சென்று வருகின்றனர். ஆழ்கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசுவதால் ராமேசுவரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அலைகள் வேகமாக அடித்து வருகிறது. கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் கவனமாக மீன்பிடிக்க சென்று வருமாறு மீன்துறை அறிவித்துள்ளது. தனுஷ்கோடியில் இன்று கடல் கடும் சீற்றத்துடன் இருந்ததால் அலைகள் ஆக்ரோசமாக அடித்தது. இதனால் தனுஷ்கோடியில் கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் யாரும் செல்லாத வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.