கள்ளக்குறிச்சி வன்முறை – கைதான 108 பேருக்கு நீதிமன்ற காவல்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எதிரொலித்தது.
நேற்று முன்தினம் திடீரென ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள பஸ்களை சூறையாடி தீ வைத்தனர். இதனால் சின்ன சேலம் நகரம் போராட்டக்களமானது. கலவரத்தை தடுக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரடியாக விரைந்து சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 10-க்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 108 பேரை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.