புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தனர்: எம்.பி., எம்.எல்.ஏக்களும் ஓட்டுப் போட்டனர்
சென்னை: நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட மாநில முதல்வர்கள், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர். 99% வாக்குகள் பதிவாகின. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
பாஜ கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் எம்பிக்கள் வாக்களிக்க நாடாளுமன்றத்திலும், எம்எல்ஏக்கள் வாக்களிக்க அந்தந்த மாநில தலைமை செயலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நியமன எம்எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மேலவை உறுப்பினகளுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் 63ல் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்.
தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் வாக்களித்தனர். முதல் ஒன்றரை மணி நேரத்தில் எம்பிக்கள் தங்களது வாக்குகளை பதவி செய்தனர்.
தமிழகத்தில் சென்னை தலைமை செயலக வளாகத்தில் இருக்கும் குழு கூட்ட அரங்கில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார். அவர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக காலை 9.55 மணிக்கு சென்னை, தலைமை செயலகம் வந்தார். அவரை துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் 2வது நுழைவு கேட் முன் பகுதிக்கு வந்து வரவேற்றனர். பின்னர், வாக்களிக்கும் குழு கூட்ட அரங்குக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியாக காலை 10 மணிக்கு தமிழக எம்எல்ஏக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கை முதல் நபராக பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
மதியம் 12.25 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வந்தனர். முன்னதாக பாமக, பாஜ மற்றும் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சி எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். மதியம் 1 மணி நிலவரப்படி 221 எம்எல்ஏக்கள் வாக்களித்து இருந்தனர். சரியாக 4.03 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த முதல்வர்கள், எம்எல்ஏக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
மக்களவை, மாநிலங்களவை எம்பி.க்கள் 776 பேரும், 4,033 எம்எல்ஏக்களும் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இதில் 5 எம்பிக்கள், 6 எம்எல்ஏக்கள் இடம் காலியாக உள்ளது. 2 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், 771 எம்பிக்கள், 4025 எம்எல்ஏக்கள் வாக்களிக்க தொகுதி பெற்றிருந்தனர். மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10.86 லட்சம். 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெறுவர் வெற்றி பெறுவர். சில எம்.பி, எம்எல்ஏக்கள் சிறையில் உள்ளதாலும், தனிப்பட்ட காரணங்களால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.
மாலை 5 மணியுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஓட்டுப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது. மொத்தம் 99% மேல் வாக்குப்பதிவானது. மாநிலங்களில் சீல் வைக்கப்பட்ட ஓட்டுபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வாக்குப்பெட்டியுடன் அந்தந்த மாநில சட்டப்பேரவை அதிகாரிகளும் டெல்லி சென்றனர்.
வாக்குப்பெட்டிக்கு விமானத்தில் தனி இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக பாஜ வேட்பாளர் முர்முவுக்கு ஓட்டு போட்டனர். ஏற்கனவே, முர்முவுக்கு 61% வாக்குகள் உறுதியாகி இருந்தது. தற்போது, எதிர்க்கட்சிகளின் ஓட்டும் முர்முவுக்கு சாதமாகி உள்ளதால், அவரது வெற்றி உறுதியாகி உள்ளது.
இதனால், வரும் 25ம் தேதி இந்திய வரலாற்றில் முதல் பழங்குடி பெண் என்று பெருமையுடன் ஜனாதிபதி பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
*வாக்களிக்காத எம்பிக்கள்
ஜனாதிபதி தேர்தலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700 ஆகும். அதிகபட்சமாக உ.பி எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208. தமிழக எம்எல்ஏக்கள் வாக்கு மதிப்பு 176. குறைந்தபட்சமாக சிக்கிமில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 7.
* சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய ஆகிய 10 மாநிலங்களில் 100% வாக்குப்பதிவாகி இருந்தது.
* பாஜ மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த தலா இரண்டு எம்பிக்களும், பகுஜன் சமாஜ், காங்கிரஸ், சமாஜ்வாடி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்பி என மொத்தம் 8 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை. பாஜ எம்பியும், நடிகருமான சன்னி தியோல், வெளிநாட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் வாக்களிக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் அதுல் சிங் சிறையில் உள்ளதால் வாக்களிக்க முடியவில்லை. சிவசேனா தலைவர்களான கஜானன் கிர்த்திகர், ஹேமந்த் கோட்சே மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் இம்தியாஸ் ஜலீலும் வாக்களிக்கவில்லை.
* தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களான நந்தமுரி பாலகிருஷ்ணா, கோரண்ட்லா புட்ச்சையா சவுத்ரி ஆகியோர் வெளிநாட்டு பயணத்தில் இருப்பதாலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ எம்.மஹிதர், ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வருவதாலும் வாக்களிக்கவில்லை.
* ஜனாதிபதி தேர்தலை ஷிரோமணி அகாலி தளம் எம்எல்ஏ மன்பிரீத் சிங் அயாலி புறக்கணித்தார்.தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் அணில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோர் சிறையில் உள்ளதால் வாக்களிக்கவில்லை.
*ஜனநாயகத்தை காப்பாற்றும் தேர்தல்
எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்திருக்குமா அல்லது மெதுவாக முடிவுக்கு வருமா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும் என்பதால் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று நான் பலமுறை கூறி வருகிறேன். அதன் முடிவை நோக்கிச் செல்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் நமக்குக் கிடைத்துள்ளன. வெறும் அரசியல் போரில் ஈடுபடவில்லை. அரசு நிறுவனங்களுக்கு எதிராக போராடுகிறேன்’ என்று தெரிவித்தார்.