இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை முதல்நாள் ஏலத்தொகை ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டியது : 5வது சுற்று ஏலம் இன்று தொடக்கம்!!
டெல்லி :
இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் பங்கேற்று இருக்கும் நிலையில், முதல் நாளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளது. நாட்டில் 20 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும் 72 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி என்டர்ப்ரைஸிஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. முதல் நாளில் 4 சுற்றுகள் வரை ஏலம் நடந்த நிலையில் 1.45 லட்சம் கோடி ரூபாய் ஏலம் கேட்கப்பட்டதாக ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
‘
அலைக்கற்றைகளின் மொத்த மதிப்பு 4.3 லட்சம் கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இன்று 5வது சுற்று ஏலம் நடைபெற உள்ளது. 3,300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அளவிற்கும் அலைக்கற்றைகளுக்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் இன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏலத்திற்கு பின்பு அலைக்கற்றைகளை ஒதுக்கும் நடைமுறை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிறைவடையும் என்று அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பருக்குள் 5ஜி சேவையை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.