Breaking News
பாரம்பரிய நெல் விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ வழங்கப்படும்- வேளாண் அதிகாரி தகவல்

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 2021-22-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவித்தபடி பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத்தில் 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் தமிழகத்தில் உள்ள 33 மாநில அரசு விதை பண்ணைகளில் உற்பத்தி செய்திட திட்டமிடப்பட்டது.

அதனை தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் சாகுபடி செய்திட தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, அறுபதாம் குறுவை, கொல்லன் சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, சிவப்பு கவுணி, கீரை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் 5 மெட்ரிக் டன் அளவு மாநிலத்தில் பல்வேறு மாநில அரசு விதை பண்ணைகளில் இருந்து பெறப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த விதைகளானது 2022-23 ம் நிதியாண்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் இந்த மாவட்டத்திலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. மொத்த விதையளவில் 80 சதவீதம் பொது பிரிவு விவசாயிகளுக்கும் 20 சதவீதம் பட்டியல் இன, பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.

விவசாயி ஒருவருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலுக்கு வலிமை சேர்க்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எனவே செங்கல்பட்டு மாவட்ட பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயனடையுங்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.