ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 236 பேர் பணி நீக்கம்- அதிரடி நடவடிக்கை
சென்னை:
கடந்த 2019-20-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை ஆவினில் மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் என 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி ஆகிய இடங்களிலும் ஆவினில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் முறையாக தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பலருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்படவில்லை. ”முறையாக விண்ணப்பிக்காத பலர் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர்.
இந்த பணி நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒரு பணியிடத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை பணி அமர்த்தியதாகவும்” ஆவின் நிர்வாக அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் குழு மதுரை, தேனி, திருப்பூர் நாமக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர் இந்த விசாரணையின்போது அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் குழு ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் வழங்கியது.
இந்த அறிக்கையை பரிசீலித்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட மொத்தம் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் பிறப்பித்துள்ளார். இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.