பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்
சென்னை,
தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2300 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்தது. இனிமேல் பணிநீடிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்று அரசு உறுதியளித்தது.
ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் இனி தற்காலிக நர்சுகளாக வேலையில் சேர மாட்டோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வும் கோரி உள்ளது நர்சுகளின் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. முதலில் சேலத்தில் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். நேற்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செவிலியர்கள் போராட்டத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அவர்கள் மத்தியில் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். டாக்டர் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோதுதான் இந்த நர்சுகள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.