மெட்ராசை போட்டு தாக்கும் ‘மெட்ராஸ்-ஐ’: தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
சென்னை:
பருவநிலை மாற்றத்தின் போது மெட்ராஸ்-ஐ என்ற கண்நோய் வைரஸ்கள் மூலம் பரவுகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் தொற்றும் வைரஸ் தான் இந்த கண்நோயை உருவாக்குகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் பரவியது. அதன் பிறகு குறைந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் பரவ தொடங்கி இருக்கிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக செல்கிறார்கள். தானாக சரியாகி விடும் என்று இருப்பவர்களும் அதிகம் உண்டு. எனவே பரவல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கண் எரிச்சல், விழிப்பகுதி சிவப்பாக மாறியிருப்பது. எப்போதும் நீர் சுரப்பது. தூக்கத்தில் இமைகள் ஒட்டிக்கொள்வது இதன் அறிகுறியாகும்.
மெட்ராஸ்-ஐ காற்றின் மூலமும், மாசு மூலமும் பரவலாம். அதேபோல் கண்நோயில் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தினாலும் நோய் தொற்று ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். மெட்ராசை மெட்ராஸ்-ஐ வைரஸ்கள் போட்டு தாக்கி வருவதால் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மட்டும் தினமும் 25-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறும்போது, மெட்ராஸ்-ஐ வந்தால் 5 நாட்களில் குணமாகி விடும். இதற்கு தேவையான மருந்துகளும் அரசு ஆஸ்பத்திரிகளில் கையிருப்பில் உள்ளது. இவை எளிதில் மற்றவர்களுக்கு பரவும் தன்மையுடையது என்பதால் கண்நோய் பாதிப்பு ஏற்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. இந்த நோய் எளிதில் குணமாக கூடியது. அதே வேளையில் அலட்சியப்படுத்தினால் பார்வையிழப்பை கூட சந்திக்க நேரிடும் என்றனர்.