கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் இயற்கை விவசாய பொருட்களுக்கான அங்காடி: அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை:
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், இயற்கை விவசாயப் பொருட்களுக்கான அங்காடி விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுபாட்டிலுள்ள, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நேற்று இந்து அறநிலையத்துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் லட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: சிஎம்டிஏவால் கோயம்பேடு வளாகத்தில் மொத்தம் 3,941 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தின் வெள்ளிவிழா ஆண்டை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இவ்வளாகத்தினை நவீனமயமாக்குவதற்கு ரூ.20 கோடியை ஒதுக்கீடு செய்தது. அதன்படி நவீனமயமாக்குதலுக்கான முன் சாத்திய அறிக்கையை தயாரிப்பதெற்கென ஆலோசகர் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் இயற்கை விவசாய பொருட்களுக்கான அங்காடி அமைப்பது தொடர்பாக தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறையினரிடம் கருத்து பெறப்பட்டு இயற்கை விவசாய பொருட்களுக்கான அங்காடி விரைவில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.