ஜனவரி 10-ந்தேதி வரையிலான நடப்பு நிதியாண்டின் நேரடி வரி வசூல் ரூ.14.71 லட்சம் கோடி – 24.58 சதவீதம் அதிகம்
புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டின் நேரடி வரி வசூல் குறித்த தரவுகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ந்தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 24.58 சதவீதம் அதிகம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. இதில் திருப்பி செலுத்தும் தொகை போக நிகர வரி வசூல் ரூ.12.31 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்ட நிகர வரியை விட 19.55 சதவீதம் அதிகம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டின் நேரடி வரிகள் மதிப்பீடு ரூ.14.20 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் இதில் 86.68 சதவீதத்தை தற்போதைய நிகர வரி வசூல் எட்டியிருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில் மொத்த அடிப்படையிலான கார்பரேட் வருமான வரி 19.72 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தனிநபர் வருமான வரியும் 30.46 சதவீதம் அதிகரித்து இருப்பதாக நேரடி வரிகள் வாரியம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.