திருவொற்றியூர் கடலில் மூழ்கிய கல்லூரி மாணவ-மாணவிகள்: போராடி மீட்ட மீனவர்கள்
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், கே.வி. கே.குப்பம் கடற்கரை பகுதியில் மாலை நேரங்களில் சுற்றி உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் வந்து பொழுதை கழித்து செல்வது வழக்கம். விடுமுறை நாளான நேற்று மாலை 3 இளம்பெண்கள் உள்பட 4 வாலிபர்கள் கே.வி.கே.குப்பம் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அவர்கள் கரையோரத்தில் கற்கள் குவிக்கப்பட்டு உள்ள இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது ராட்சத அலை இளம்பெண்களை கட லுக்குள் இழுத்து சென்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அலையின் சீற்றத்தால் அவர்களும் கடலுக்குள் இழுத்துச்செல் லப்பட்டனர். 2 இளம்பெண்கள் உள்பட 4 பேர் தண்ணீரில் சிக்கி தத்தளித்தனர். அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அவர்களால் நீந்தி கரைக்கு வர முடியவில்லை.
கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அப்பகுதி மீனவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.
அலையின் வேகம் அதிகமாக இருந்ததாலும், கற்கள் அதிகம் கொட்டப்பட்டு இருந்ததாலும் மீனவர்களால் கடலுக்குள் இறங்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து வலைகள் மற்றும் கயிறுகளை கடலுக்குள் வீசி தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்க முயன்றனர். இதிலும் சிரமம் ஏற்பட்டது. அலையின் வேகத்தால் கயிறுகளை அவர்கள் அருகில் வீச முடியவில்லை.
நீண்ட நேர போராட் டத்துக்கு பின்னர் கடலில் மூழ்கிய இளம்பெண்கள் உள்பட 4 பேரையும் மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் ஆபத்தான நேரத்தில் உதவிய மீனவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் என்று தெரிகிறது.
கடலில் மூழ்கியவர்களை வலை, கயிறு கட்டி மீனவர்கள் மீட்டுகும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.