வட மாநிலத்தவர்கள் சேலம் தொழிலாளியை கட்டி வைத்து 2 நாட்களுக்கு அடித்ததாக குற்றச்சாட்டு – 7 பேர் கைது
சூளகிரி அருகே திருடன் எனக் கூறி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியைக் கட்டி வைத்து 2 நாட்களாக சரமாரியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் 5 வட மாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டட வேலைக்கான ஒப்பந்ததாரராக ஓசூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார்.
அங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக துணை ஒப்பந்தத்தை எடுத்து, பிரபாகரனுடன் பொங்கலுக்கு முன்பு வேலை செய்துள்ளனர். மீதி வேலை இருந்த நிலையில், இன்னும் வேலை தொடங்கவில்லை.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கந்தனூரில் வசிக்கும் தனது அண்ணன் மகன் பிரபாகரன் (33) என்பவரிடம், சின்னாறில் வேலை உள்ளதாகவும் போய் வேலை பார்க்குமாறு கூறியுள்ளார்.
“கட்டிப் போட்டு தாக்கினார்கள்”
அதைத் தொடர்ந்து பிரபாகரன் சின்னாறுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி, இரவு அந்தப் பகுதியில் உள்ள கம்பி வேலி அருகில் பிரபாகரன் அமர்ந்திருந்தார். அந்த நேரம் ஏலகிரியைச் சேர்ந்த, மேற்பார்வையாளர் தங்கராஜ் மற்றும் வட மாநில இளைஞர்கள் 5 பேர் வந்தனர்.
அவர்கள் பிரபாகரனை பார்த்து இரும்பு பொருட்களைத் திருட வந்தவர் என நினைத்து கயிற்றால் கட்டி போட்டு சரமாரியாக தாக்கியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து கட்டட உரிமையாளருக்கு போன் செய்து தகவல் தெரிவித்ததாகவும் கூறினர்.
வீடியோவை அனுப்பி மிரட்டல்
பிரபாகரனை அந்தப் பகுதியில் உள்ள அறையில் கட்டிப் போட்டு இரும்புக் கம்பியால் அவர்கள் சரமாரியாகத் தாக்கியதாகவும் அதில் பிரபாகரன் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
மேலும் அவரிடம் இரும்புப் பொருட்களைக் கொடுக்கவில்லை என்றால், கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. தாக்குவதை வீடியோவாக எடுத்து, ஊத்தங்கரையில் உள்ள நாராயணனுக்கு அனுப்பி வைத்து, “அவர் எடுத்துச் சென்ற இரும்புப் பொருட்களை கொடு, இல்லாவிட்டால் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடு”, என மிரட்டியதாக பிபிசி தமிழிடம் பேசிய நாராயணன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து நாராயணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தானும், தனது அண்ணன் மகன் பிரபாகரனும் ஏஆர்சி கட்டுமான நிறுவனத்தில் பொங்கலுக்கு முன்பு வரை வேலை பார்த்ததாக” கூறினார். மேலும், “கடந்த 27ஆம் தேதி சென்ற பிரபாகரனை காணவில்லை என்பதால் 28ஆம் தேதி தேடியதாகவும்,” கூறினார்.
அவர், “கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பிரபாகரனை, கட்டிப்போட்டு, வட இந்தியர்கள் தாக்கும் வீடியோவை எனது கைப்பேசிக்கு ஏ.ஆர்.சி கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியிலிருந்து அனுப்பி வைத்தனர்.
கம்பெனியிலிருந்து தொலைபேசியில் என்னை அழைத்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான கம்பியை பிரபாகரன் திருடிவிட்டதாகவும், அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுமாறும் கூறினார்கள். இது தொடர்பாக நேற்று காலை 11 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நான் புகாரளித்தேன்,” என்று தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் சூளகிரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தன்னுடைய அண்ணன் மகனை நேற்று மதியம் 2 மணிக்கு மீட்டுக்கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
“இரண்டு நாட்கள் உணவு அளிக்காமல், கை, கால்களைக் கட்டிபோட்டு தொங்கவிட்டு, அங்கு பணிபுரிந்த வட இந்தியர்கள் அடித்துள்ளனர். வலது கால், கை முறிவு ஏற்பட்டுள்ளது. இடது கண்ணிலும் அடிபட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக” காவல்துறை அதிகாரிகளிடம் பிபிசி பேசியபோது தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து சூளகிரி காவல் துறையினர் பிபிசி தமிழிடம் கூறும்போது, “மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவின் பேரில், சின்னாறிலுள்ள ஏஆர்சி கம்பெனியிலுள்ள கண்டெய்னர் அறை ஒன்றில் கயிற்றால் கட்டி, அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரபாகரனை மீட்டதாக” தெரிவித்தனர்.
மேலும், அவரை ஆம்புலென்ஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரபாகரனிடம் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து ஒப்பந்ததாரர் ஓசூர் சப்தகிரி நகரைச் சேர்ந்த மணி (47), மேற்பார்வையாளர் தங்கராஜ்(33), உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர்(46), பாலேந்தர்(28), சுசில்குமார்(24), அர்ஜூன்(24) ,அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திப்பந்தர் சோக்கியா(22) ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் மீது கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.