கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலை எந்த அளவுக்குப் பாதிக்கும்?
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலை பாதிக்கும்?
81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக 8,551.13 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்படவிருக்கிறது.
அரசு தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, இந்த நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்காற்று மண்டலம் (CRZ IA), CRZ II, CRZ IV-A ஆகிய பகுதிகளுக்குள் வருகிறது.
இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையும் இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011ன் படி பகுதி IV(A)ன் கீழ் வருகிறது. IV (A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு புதிதாக எந்தக் கட்டுமானத்தையும் கட்ட முடியாது.
ஆனால், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த விதிமுறையில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. மும்பை கடற்கரையை ஒட்டி சத்ரபதி சிவாஜி சிலையை அமைப்பதற்காக செய்யப்பட்ட அந்தத் திருத்தத்தின்படி, CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் நினைவிடங்கள்/நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்தத் திருத்தத்தின் அடிப்படையில்தான், தற்போது பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் அமைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல்கள் ஆர்வலர்கள் எதிர்ப்பு
ஆனால், இந்தத் திட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சில மீன்பிடி சங்கங்களும் எதிர்க்கின்றன. இந்தத் திட்டம் தொடர்பாக ஊரூர்குப்பம் மீன் பிடிப்போர் கூட்டுறவு சங்கம் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் அதற்கான காரணங்களையும் முன்வைத்துள்ளது.
“கடலிலும், கடற்கரையிலும் திட்டங்களை கொண்டுவரும் போது அந்தந்த மாவட்டங்களில் மீனவர்களுக்கு பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதனை அறிந்து கொள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2011 பத்தி 6(c)ல் மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை குழுமத்தில் (DCZMA) மூன்று மீனவ பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
ஆனால் 21 வருடங்கள் ஆகியும் DCZMAல் மீனவ பிரதிநிதிகள் ஒருவர் கூட கிடையாது. மீனவ பிரதிநிதிகள் இல்லாமலேயே கடலிலும், கடற்கரையிலும் அரசால் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களின் மீன்பிடி தகவல்களை அரசு முறையாக கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்யாமல் கடல் நடுவே கலைஞர் பேனா நினைவுச்சின்ன திட்டத்தை அமைத்தால் கரைத்தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் நடுக்கடலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
ஆகையால் இந்த திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், மீனவர்களின் மீன்பிடி இடங்களை சட்டத்தில் கூறியுள்ள படி TNSCZMP ல் பதிவு செய்ய வேண்டும்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசியத் தலைவரான ஆண்டன் கோம்சும் இது தொடர்பாக துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார். “சமீபத்தில் தேதிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் தமிழக கடற்கரையில் 422 கி.மீ. அளவுக்கு கடல் அரிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்தியாவில் கடல் அரிப்பு அதிகமுள்ள நான்காவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 1990 முதல் 2018வரை 1802 ஹெக்டேர் நிலம் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலரிப்பைத் தடுக்கும் கட்டுமானங்கள் நூற்றுக்கணக்கில் செய்தும் பலனில்லை.
ஆகவே நினைவுச் சின்னத்தின் நிலைப்புத் தன்மை, கடலரிப்பு, CRZ அறிவிப்பாணை, மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்” என்கிறார் ஆண்டன் கோம்ஸ்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. “இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை காணமுடிகிறது. திட்ட அமைவிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறவில்லை என சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தென் சென்னையைச் சேர்ந்த 14 கிராமங்கள், வட சென்னையைச் சேர்ந்த 20 கிராமங்கள் என 34 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அப்பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பல ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
பங்குனி ஆமைகள் (Olive Ridley Turtle) திட்ட அமைவிடத்தில் தென்படுவதாக சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் 175வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அழிந்து வரும் உயிரினமாக IUCN அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பங்குனி ஆமைகளின் வாழிடமாகவும் முட்டையிடும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளதால். இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் பங்குனி ஆமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயம் உள்ளது.
திட்ட அமைவிடத்தில் இருந்து 130மீ தூரத்தில் கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரப் பகுதி அமைந்துள்ளது. பொதுவாக இந்த முகத்துவாரப் பகுதியில தான் மீன்கள் அதிகம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதனால், கடலின் உயிர் பன்மையம் செழிப்பாக வைத்திருக்க உதவும் இப்பகுதியின் ஆரோக்கியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரத்தின் அருகில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் அப்குதியின் உயிர் பன்மையம் கடுமையாக பாதிக்கப்படும்.
இத்திட்டத்திற்காக கடலில் ஆழ்துளைகள் போடப்பட்டு பிரமாண்ட தூண்கள் அமைக்கப்படவுள்ளன. இது மீட்டெடுக்க முடியாத நிரந்தர சூழலியல் பாதிப்புகளுக்கு வழிவகை செய்து விடும்.
ஏற்கெனவே துறைமுகம் கட்டியதன் விளைவாக ஆண்டிற்கு 20 மீட்டர் அளவிற்கான கடல் அரிப்பை வட சென்னை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டால் மெரினா கடற்கரை உட்பட அருகாமையில் உள்ள பல மீனவ கிராமங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும்” என அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
இந்தத் திட்டத்திற்கான ஆய்வே முறைப்படி செய்யப்படவில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன். “திட்ட ஆய்வை 2021 மே – ஜூலை மாதங்களில் செய்ததாகச் சொல்கிறார்கள். இந்த அரசே 2021 மே மாதம்தான் பதவியேற்றது. உடனே இந்த ஆய்வை நடத்தினார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
“ஏற்கெனவே சென்னைத் துறைமுகத்தால், அதற்கு வடக்க உள்ள காசிமேட்டிற்கு அப்பால் துவங்கி திருவள்ளூர் மாவட்டம் நெட்டுக்குப்பம் வரை பல கிராமங்கள் கடலுக்குள் சென்றுவிட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை – இரண்டு கி.மீ.க்கு கடல் உள்ளே வந்துவிட்டது. பல பட்டா நிலங்கள் தற்போது கடலுக்குள் இருக்கின்றன.
ஆனால், இந்தத் திட்டத்தில் பாலம் போலத்தான் அமைப்பதால் நீரோட்டம் பாதிக்கப்படாது என நம்புகிறோம். அந்தப் பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்போம் என்கிறார்கள். ஆனால், அதைச் சட்டப்படி எங்களுக்குச் உறுதி செய்து தர வேண்டும். கடலும் கூவம் ஆறும் கலக்கும் இடத்தில் இந்தக் கட்டுமானம் நடக்கவிருக்கிறது. அது இறால் மீன்கள் அதிகமுள்ள பகுதி. ஆகவே கட்டுமான பணிகள் நடக்கும் நேரத்தில் மீனவர்களுக்கான வாழ்வாதாரத்தை அரசு உறுதிசெய்ய வேண்டும்” என பிபிசியிடம் தெரிவித்தார் அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ்.
பொதுவாக, இதுபோன்ற திட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. மேலும் பதிவுசெய்யப்படும் ஒவ்வொரு எதிர்ப்பிற்குமான பதிலை, திட்டத்தை செயல்படுத்துவோர் தர வேண்டும்.
செவ்வாய்க்கிழமையன்று நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சீமான் மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க அளவில் எதிர்ப்புக் கருத்துகள், ஆட்சேபணைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு மிக முனைப்பாக இருக்கிறது.