போரில் உக்ரைனை ஒருபோதும் ரஷ்யாவால் தோற்கடிக்க முடியாது : ரஷ்ய அதிபர் புதின் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் ஜோபிடன் பதிலடி!!
போலந்து : போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் சூளுரைத்த நிலையில், உக்ரைனை ஒருபோதும் ரஷ்யாவால் வீழ்த்த முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் பதிலடி கொடுத்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து நாளை மறுதினத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேற்று முன்தினம் அறிவிக்கப்படாத பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ரூ.4,135 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்தார். அங்கு இருந்து ரயில் மூலம் போலாந்து சென்ற ஜோபிடனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் தலைநகர் வார்ஷாவிற்கு சென்ற ஜோபிடன், போலந்து அதிபர் Andrzej Duda-வை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆதரவை யாராலும் அசைக்க முடியாது. முன்பை விட உறுதியாக உள்ள உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் துணை நிற்கும். போரில் உக்ரைனை ஒருபோதும் ரஷ்யாவால் தோற்கடிக்க முடியாது,’என்றார்.முன்னதாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நாடாளுமன்றத்தில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,’உக்ரைன் மக்களுக்கு எதிராக நாங்கள் சண்டையிடவில்லை. உக்ரைன் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் மேற்கத்திய எஜமானர்களின் பணயக்கைதிகளாக உக்ரைன் மக்கள் சிக்கி உள்ளனர். உக்ரைன் உடனான உள்ளூர் மோதலை உலகப் போராக மாற்ற அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயலுகிறது. இந்த போரை ஒருபோதும் நாங்கள் கைவிட மாட்டோம். அதே போல, அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகுகிறோம்’’ என்றார்.